தேனீக்கள் ராணுவ உளவுக்கு? சீனாவின் சைபோர்க் முயற்சி
தேனீக்களை கட்டுப்படுத்தும் மைண்ட் கண்ட்ரோல் சிப்கள்!
தேனீக்களை கட்டுப்படுத்தும் மைண்ட் கண்ட்ரோல் சிப்கள்! ராணுவ உளவுத்துறையில் பயன்படுத்த சீனா உருவாக்கிய அதிநவீன சைபோர்க் கருவி.
சீனா, தேனீக்களை ராணுவ உளவுத்துறைக்கு பயன்படுத்தும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனம், தேனீக்களின் மூளையை கட்டுப்படுத்தக்கூடிய மைண்ட் கண்ட்ரோல் கருவியை உருவாக்கியுள்ளது. இந்த கருவியின் எடை 74 மில்லிகிராம் மட்டுமே.
இந்த சாதனத்தை தேனீயின் முதுகில் பொருத்தி, மூன்று ஊசிகள் மூலமாக மூளையில் நேரடியாக இணைக்கின்றனர். இதில் இருந்து வெளியேறும் மின்னணு துடிப்புகள் (electronic pulses) மூலம் தேனீயை முன்னே பறக்கவும், இடது/வலதுபக்கம் திரும்பவும், கீழே இறங்கவும் கட்டளை அளிக்க முடிகிறது.

இந்த சோதனைக்கு பத்தில் ஒன்பது முறை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பின்புலத்தில், பூச்சிகளை இயந்திரங்களாக மாற்றும்போது கிடைக்கும் இயற்கை இயக்கம், சிறந்த சுழற்சி திறன்கள் மற்றும் சுற்றுச்சூழலை உணரும் திறனை பயன்படுத்தும் நோக்கம் உள்ளது. இதனை ராணுவ உளவுத்துறை, பயங்கரவாதத் தடுப்பு, நகரக் கலவரக் கண்காணிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தலாம் என பேராசிரியர் ஜாவோ ஜீலியாங் கூறுகிறார்.
இத்திட்டத்திற்கு முன்மாதிரியாக, சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளுக்கான சைபோர்க் கருவிகள் இருந்தாலும், அவை இக்கருவியைவிட மூன்று மடங்கு எடையுடன் இருந்தன. தற்போதைய கருவியின் எடை குறைந்திருப்பது முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
மேலும், இதன் துல்லியத்தை அதிகரிக்க மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
