தங்க நகைக்கு ஆசைப்பட்ட விஏஓ: சேலத்தில் கைது
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கருமாபுரம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஸ்ரீரங்கம்மாள், வீட்டிலேயே தென்னங்கீற்று தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
சேலத்தில் விஏஓவாக இருந்த பிரபு, பெண்ணிடம் நகை அபேஸ் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். பல மாவட்டங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கருமாபுரம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஸ்ரீரங்கம்மாள், வீட்டிலேயே தென்னங்கீற்று தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
மே 26ம் தேதி, வாடிக்கையாளர் போல வந்த ஒரு நபர், தென்னங்கீற்று விலை கேட்பது போல பேசி, ஸ்ரீரங்கம்மாளின் நம்பிக்கையை பெற்றார். பின்னர் அவர், ஒரே கால் பவுன் தங்க நகையை மதிப்பீடு செய்வதாக சொல்லி எடுத்துச் சென்று தலைமறைவாகிவிட்டார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்த, குற்றம் செய்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தோட்டப்பாடியைச் சேர்ந்த பிரபு (47) என்பதும், அவர் ஒரு காலத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியதும் தெரியவந்தது. பணியில் ஒழுங்கீனமாக இருந்ததால், 2015ஆம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
பிரபு, வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்கிறேன் என்றும், ஏலம் செல்லும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் கூறி, ஸ்ரீரங்கம்மாளிடம் நகையை அபேஸ் செய்துள்ளார். மேலும், அரசு வேலை வாக்குறுதியுடன் பல்வேறு மாவட்டங்களில் பண மோசடியில் ஈடுபட்டதற்கான புகார்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
பிரபுவின் தந்தை காலமானதுக்குப் பிறகு, வாரிசு அடிப்படையில் அவர் விஏஓ பதவியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பணியில் சரிவர செல்லாமல், மதுபோதையில் இருந்ததாகவும் புகார்கள் வந்துள்ளன.
பிரபுவை போலீசார் கைது செய்து, வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.
